புதன், ஜூலை 21, 2010

தனி மனிதன் காப்பு

தனி மனிதன் காப்பு: "
ஒவ்வொரு மனிதனும் பிறந்திருக்கின்றான், அவன் அறிவிலே முன்னேறிவர வேண்டியது தான் பிறவியினுடைய நோக்கம்; இது தான் இயற்கையினுடைய இயல்பு, அது கெடக் கூடாது. அதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்கின்ற போது "தனி மனிதன் காப்பு" (security) என்பது அங்கு தான் உண்டாகின்றது.

உலகம் முழுவதிலும், மேல் நாட்டிலே கூடப் பல இடங்களில் என்னிடம் கேட்பதுண்டு, சுதந்திரத்தைப் பற்றி நீங்கள் என்ன கூறுகின்றீர்கள் என்று. 'தனிமனிதனுடைய சுதந்திரத்தைப் பற்றி நீங்கள் கேட்கின்றீர்கள்; சுதந்திரம் இருக்கின்றது; அந்தச் சுதந்திரத்தைக் காப்பதற்கு என்ன செய்ய வேண்டுமென்று பார்க்கின்ற போது, கட்டுப்பாட்டினால் தான் சுதந்திரம் உண்டாகும்.

பிறர் சுதந்திரத்தை அழித்து விடக் கூடாது என்ற ஒரு பேருணர்வு ஒவ்வொரு மனிதனுக்கும் வந்து அவனுடைய செயல்களை ஒழுங்குப்படுத்திக் கொள்ளும்போது தான் சுதந்திரம் எல்லோருக்கும் கிட்டுமே தவிர, சுதந்திரம் என்பது தானாக விரும்பும் காரியத்தை எல்லாம் தங்குதடையின்றிச் செய்வதற்கு ஒரு வாய்ப்பு என்று வைத்துக் கொள்வது தவறான கருத்தாகும்' என்று நான் அடிக்கடி கூறுவதுண்டு.

ஆகவே, சுதந்திரம் என்பது உண்மையாக எல்லோருக்கும் வேண்டுமானால், பிறருடைய சுதந்திரத்தை நாம் காக்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் எடுத்துக் கொள்ளக்கூடிய கட்டுப்பாடுகளில் தான் எல்லோருடைய சுதந்திரமும் காக்கப்படும்; ஒவ்வொரு தனி மனிதனுடைய பாதுகாப்பும் அமையும்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

வியாழன், பிப்ரவரி 04, 2010

                               

                                          குருவணக்கம்

சிந்தையை யடக்கியே சும்மா விருக்கின்ற
சீரறிய செய்த குருவே !
அந்தநிலை தனிலறிவு அசைவற்றிருக்கப் பெரும்
ஆனந்தம் பொங்குதங்கே !
இந்தபெரும் உலகமிசை எடுத்த பல பிறவிகளின்
இறுதிப் பயனாகிய
சந்ததமும் எனைமறவாத சாந்தவாழ்வளித்தோய் என்
சந்தோஷ செய்தி இதுவே.

சனி, ஜனவரி 30, 2010

எல்லாம் வல்ல தெய்வமது
எங்கும் உள்ளது நீக்கமற
சொல்லால் மட்டும் நம்பாதே
சுயமாய்ச் சிந்தித்தே தெளிவாய்
வல்லாய் உடலில் இயக்கமவன்
வாழ்வில் உயிரில் அறிவும் அவன்
கல்லார் கற்றார் செயல் விளைவாய்க்
காணும் இன்ப துன்பமவன்.


அவனின் இயக்கம் அணுவாற்றல்
அணுவின் கூட்டுப் பக்குவம்நீ
அவனில்தான்நீ உன்னில் அவன்
அவன் யார்? நீயார்? பிரிவேது?
அவனை மறந்தால்நீ சிறியோன்
அவனை அறிந்தால்நீ பெரியோன்
அவன் நீ ஒன்றாய் அறிந்தைடம்
அறிவு முழுமை அதுமுக்தி.

வேதாத்திரி மகரிஷி